Type Here to Get Search Results !

திருவொற்றியூர், குடியாத்தத்துக்கு இடைத்தேர்தல் இல்லை!' - தேர்தல் ஆணையம்


நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அம்மாநில தலைமைச் செயலாளர்கள்/தேர்தல் ஆணையர்கள், தேர்தல் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள் தொடர்பாக கருத்துக் கூறியிருந்ததாகவும், அதன் அடிப்படையில் தற்போதைய சூழலில் தேர்தல் நடத்த வேண்டாமென முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறது.

தமிழகத்தின் திருவொற்றியூர், குடியாத்தம், அசாமின் ரங்கபாரா, சிப்சாகர், கேரளாவின் குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்குவங்கத்தின் ஃபலகாட்டா ஆகிய தொகுதிகளில் தற்போதைய சூழலில் இடைத்தேர்தல் நடத்தப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பீகாரில் காலியாக உள்ள ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் மணிப்பூரின் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைச் செயலாளர் சண்முகம், தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறது. திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்றோடு 6 மாத காலஅவகாசம் முடிந்த நிலையில், அவை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் முடிவடையவில்லை. திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே தி.மு.க வசமிருந்தவை. திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் தொகுதி காத்தவராயன் ஆகியோர் உடல்நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தனர்.


Top Post Ad

Below Post Ad