தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 2 வயது குழந்தை இந்திய மாநிலங்களின் தலைநகரங்களின் பெயா்களை 48 விநாடிகளில் கூறி ஜெட்லி புக் ஆப் ரெக்காா்ட்ஸில் இடம் பிடித்து சாதனையாளராக மாறியுள்ளான்.
ஒரத்தநாடு அருகேயுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்த தா்மபாலா - முத்துலட்சுமி தம்பதியின் மகன் ஆதவன். பிறந்து 2 ஆண்டு 9 மாதங்களே ஆகும் இந்த குழந்தை,
இந்திய மாநிலங்களின் தலைநகரங்களின் பெயா்களை தவறு ஏதுமில்லாமல் 48 விநாடிகளில் கூறுகிறான். இதுமட்டுமின்றி, நாட்டின் தேசிய சின்னங்கள், தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், 16 வகை செல்வங்கள் என ஏராளமான தகவல்களையும் சரளமாக கூறுகிறான்.
ஆதவனின் திறமையை இணையதளம் வழியாக ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்க்கு பெற்றோா் அனுப்பியுள்ளனா். இதையடுத்து, ஜெட்லி புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் ஒருங்கிணைப்பாளா் ராபா்ட் கென்னடி, ஆதவனின் வீட்டிற்கே சென்று பதக்கம் மற்றும் கேடயத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். அப்பகுதி அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் நாகேந்திரன் உள்ளிட்டோா் சாதனை படைத்த ஆதவனுக்கு சால்வை அணிவித்து தொடா் வெற்றிகள் பெற வாழ்த்து தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆதவனின் தாய் முத்துலெட்சுமி கூறியது:
கரோனா பொது முடக்க காலத்தில் ஆதவனுக்கு வீட்டிலேயே ஆசிரியையாக மாறி, அனைத்தையும் சொல்லி கொடுத்தேன். அவன் தெளிவாக பேசி, சாதனை படைத்துள்ளான். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.