சிங்காரப்பட்டிணத்தின் சின்னராணி சித்திரலேகாவின் அழகும், அறிவும் அவனி அம்பத்தாறு தேசங்களிலும் பிரபலம். சின்னராணியை திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரர்கள் “நீ, நான்” என்று ஒற்றைக் காலில் நின்றனர்.சித்ரலேகாவின் தந்தை சித்திரசேனன் யாருக்கு அவளை திருமணம் செய்து கொடுப்பது என்று புரியாமல் குழம்பினார்.
புத்திசாலியான தன் மகளிடமே இதற்கு ஒரு நல்ல உபாயம் சொல்லுமாறு கேட்டார்.சின்னராணியின் ஆலோசனைப்படி அரசன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். “அழியாத செல்வம் உடையவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். ஆனால் அதை சின்னராணியிடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்த ஆண் மகனுக்கு சின்னராணி மாலை இடுவார்”. இப்படி அறிவிக்கப்பட்டது.
சின்னராணியின் சுயம்வரச் சேதி காட்டுத் தீ போலப் பரவியது.ராஜகுமாரர்கள் சித்திரசேனனின் நாட்டை நோக்கி விரைந்தனர். சித்திரசேனனின் சிங்காரப்பட்டினம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்கள் தங்கள் ராஜகுமாரியை கைப்பிடிக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
விழா மண்டபத்தில் மன்னன் சித்திரசேனன் நடுநாயகமாக வீற்றிருந்தான். அவன் பக்கத்தில் ஒருபுறம் பட்டத்து ராணியும் மறுபுறம் சின்னராணியும் அமர்ந்திருந்தனர். எப்போதும் இல்லாத
அளவிற்கு ராஜப்பிரதானிகளும் பொது மக்களும் அரசவை மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராஜகுமாரர்கள் முன் வரிசையில் ஆடம்பரமாக அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு ராஜகுமாரனும் தன்னுடைய நாட்டின் பரப்பு, செல்வ வளம், இவை
எல்லாவற்றையும் பட்டியலிட்டு கொண்டு வந்து சித்திரசேனனிடம் கொடுத்தனர். உலகத்திலேயே விலை மதிப்பற்ற ஒரு அரிய வைரக்கல்லை கொண்டு வந்து சின்னராணியின் காலடியில் வைத்தான் ஒரு ராஜகுமாரன். இன்னொருவன் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மிக அழகிய சிம்மாசனம் ஒன்றைக் கொண்டு வந்தான், தனது செல்வத்தின் அடையாளமாக.
இவை எதுவுமே ராஜகுமாரியை திருப்திப்படுத்தவில்லை. ராஜகுமாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அப்போது இளைஞன் ஒருவன் மண்டபத்திற்குள் வந்தான். அவன் கையில் ஓலைச்சுவடி கட்டு ஒன்றை வைத்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு ஏழைப்புலவன் போல இருந்தான்.
“புலவரே.. இன்று சுயம்வரம்.. நடக்கிறது நாளை வாருங்கள் சன்மானம் தருகிறேன்..” என்றார் மன்னர். “நான் சன்மானம் பெற வரவில்லை.. சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்..” என்றான் இளைஞன். “நீ.. என்ன விலைமதிப்பற்ற செல்வம் கொண்டு வந்திருக்கிறாய்..” என்று சிரித்தபடியே கேட்டார் மன்னர். உடனே அந்த இளைஞன் தன் கையிலிருந்த ஓலைச்சுவடிக் கட்டை மன்னனிடம் கொடுத்தான்.
ஓலைச் சுவடிக் கட்டை சின்னராணியிடம் கொடுத்தார் மன்னர். சின்னராணி சுவடியைப் பிரித்தாள். திருக்குறள் அத்தனையும் அதில் எழுதப்பட்டிருந்தது. “நான் கேட்டது விலை மதிப்பற்ற செல்வம்.. அழியாத செல்வம்.. ஆனால் நீ என்னிடம் கொடுத்திருப்பது.. திருக்குறள்..” என்றாள் சின்னராணி.
“ஆமாம் இளவரசி.. இரண்டும் ஒன்று தானே திருக்குறள் கல்வியின் அடையாளம். எல்லாச் செல்வத்திலும் கல்வி தான் அழியாத செல்வம். விலைமதிப்பற்ற செல்வம்”.
“அது எப்படி அழியாத செல்வம் ஆகும்” என்றாள் சின்னராணி. “நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாம். அள்ள அள்ள குறையாதது கல்வி ஒன்று தான்” என்றான்.
“நீங்கள் போட்டியில் ஜெயித்துவிட்டீர்கள். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்றாள் சின்னராணி.
“அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரு ஆசிரியன் நான்” என்றான் அவன்.
கல்வி கேள்விகளில் சிறந்த ஆசிரியர் சின்னமணி அழகிற் சிறந்த சின்னராணிக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. சின்னமணியும் சின்னராணியும் சிங்காரப்பட்டினத்தில் பல ஆண்டுகள் அரசாண்டு பல பள்ளிகளைத் திறந்து மக்களின் கல்விக் கண்களைத் திறந்தனர்.
*கொடுத்தாலும் குறையாத.. அள்ள அள்ள அழியாத செல்வம் "கல்வி" மட்டுமே..!!*