மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், தென்கொரிய நிறுவனத்தின் ‘பப்ஜி’ (Player Unknown’s Battle grounds -PUBG) உள்ளிட்ட 117 சீன செயலிகளுக்கு அண்மையில் தடை விதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்தான் தடைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. முன்னதாக ஜூன் மாதம், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளும், ஜூலை மாதம் 47 செயலிகளும் தடை செய்யப்பட்டன. இதில், பப்ஜி ஆன்லைன் விளையாட்டு 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவில் தான் நடந்துள்ளன. இந்தியாவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு மிக மிகப் பிரபலம். அதுவும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், பப்ஜிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை. ஆனால், ‘பப்ஜி’ விளையாட்டை இந்தியாவில் ஆண்ட்ராய்ட் பயனர்கள், ஆப்பிள் போன் பயனர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதேநேரம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்களால் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய முடியாது. இந்தாண்டு முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடி என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ‘பப்ஜி’ நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில், ‘அக். 30ம் தேதி (இன்று) முதல் இந்தியாவில் பப்ஜி மொபைல் மற்றும் பப்ஜி மொபைல் லைட் மூலம் பப்ஜி விளையாட்டு விளையாட முடியாது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், பப்ஜி மொபைல் விளையாட்டின் உரிமையாளரான டென்சென்ட் கேம்ஸ் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ‘இந்த தடை முடிவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். இந்தியாவில் எங்களுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பயனர்களின் தகவல்களை பாதுகாப்பது முதன்மையானது. நாங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்கி செயல்பட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.
‘பப்ஜி’ விளையாட்டுக்கான தடை அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மாற்றாக இந்தியாவில் ‘FAU-G’ விளையாட்டு அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் முதல் டீஸரை சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டார். இருப்பினும், அதற்கான சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் நாடு முழுவதும் பலர் அதற்கு அடிமையாகி உயிரை மாய்த்துக் கொண்டனர். அதனால், இந்த விளையாட்டை தடை செய்ய பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source Tamil Murasu