Type Here to Get Search Results !

தினம் ஒரு குட்டிக்கதை - பால. ரமேஷ்


ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்! என்றான். அவனும் ஒத்துக் கொண்டான்.

பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன். ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்! என்றான். மூத்தவன், ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது! என்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர்.

வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு! என்று கூறி புதிரைச் சொன்னார். முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள் என்றார். இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, என் புதிருக்கு விடை சொல் என்றார். மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது. இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றன என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, பசு எனக்குத்தானே! என்று கேட்டான். முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்! என்றார் பிரபு.

பிரபு! இளையவனை அழைத்தார். புதிருக்கு விடை சொல் என்றார். பிரபு! நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும், வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்! இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே! என்று சொல்லி பசுவை இளையவனுக்கு கொடுத்தார்.

*நீதி* :

*அறிவால் அனைத்தையும் வெல்லலாம்.*


Top Post Ad

Below Post Ad