காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்ததால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
‘நேற்று தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வரும் 2-ம் தேதி தென் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகரக் கூடும்.
இதனால் நவ.29 மற்றும் நவ.30ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.1ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் .
டிச.2ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிச.3ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 29ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்’.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.