புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி தமிழக கடலோர பகுதிக்கு வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 23ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 24ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. 25ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் நவ.25 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.