திருவண்ணாமலை,திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்று வருகிறது.இன்று காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. மாலையில் பிச்சாண்டவர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 29-ந் தேதி (நாளை மறுநாள்) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவமும், நிறைவாக 3-ந் தேதி சண்டிகேஸ்வரர் உலாவும் நடக்கிறது.இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 29-ந் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ள மகா தீபத்தையொட்டி அன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளூர் மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே வராத வகையில் சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் அதிலிருந்து தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சி அளிக்கும். இந்த ஆண்டு 11 நாட்களும் பக்தர்கள் மலையேற அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 29 மற்றும் 30-ந் தேதி வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீபத் திருவிழாவை காண திருவண்ணாமலை நகருக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளியூரை சேர்ந்த பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் திருவண்ணாமலையில் வரும் 29-ம் தேதி தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.