வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று பகல் 12 மணி அளவில் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வரும் போது, கதவு அருகே நின்ற கண்டக்டர் எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்தார். இது பயணிகளுக்கோ, டிரைவருக்கோ தெரியாது. இதனால் டிரைவர் பஸ்சை தொடர்ந்து ஓட்டினார்.
ஆரல்வாய்மொழி நிறுத்தம் வந்ததும் சில பயணிகள் பஸ்சில் ஏறினார்கள். சுப்பிரமணியபுரம் அருகே செல்லும் போது தான் பயணிகளில் சிலர் டிரைவர் இருக்கை பக்கம் சென்று கண்டக்டர் எங்கே? நாங்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் வண்டியை ஓரமாக நிறுத்தி உள்ளார் அப்போதுதான் டிரைவருக்கு, கண்டக்டர் இல்லாமல் பஸ்சை ஓட்டியது தெரிய வந்தது. உடனே அவர் கீழே இறங்கி, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் ஏறி சென்றார். அதற்குள் கீழே விழுந்த கண்டக்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பஸ்சில் இருந்து கண்டக்டர் விழுந்தது கூட தெரியாமல் டிரைவர் 2½ கி.மீ. தூரம் பஸ்சை இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.