திமுக ஆட்சி அமைந்ததும் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு, மீண்டும் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தினையே கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வைத்து போராடிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல் இருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
2019ம் ஆண்டு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடங்கினார்கள். அப்போது அரசு ஊழியர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய தரம் தாழ்ந்த காரியத்தை மட்டுமே அதிமுக ஆட்சி செய்தது.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி, உள்ளே நஞ்சை வைத்து வெளியே நயமாக, வேண்டுகோள் விடுத்தார். ஆனால் வேலை நிறுத்தத்தை விலக்கி கொண்டு கொரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றி வரும் 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பேரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது. அரசு ஊழியர் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதி, அரசு ஊழியர் பணிக்காலத்தில் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை வழங்கியது, திருமண கடன், வாகன கடன், வீடுகட்ட கடன் அளித்தது, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கியது, 2 லட்சம் சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்தது, 10 ஆயிரம் சாலை பணியாளர்களையும், 7 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களையும் நியமித்தது என திமுக ஆட்சிதான், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் ஒளியேற்றி உயர்வு தந்த ஆட்சி. அரசு ஊழியர்களை நள்ளிரவில் அதிமுக ஆட்சி கைது செய்து ஒரே நாளில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த போது அவர்களை காப்பாற்றும் அரணாக அன்றும் இன்றும் நிற்பது திமுக.
ஆனால் போராட்டத்தை திரும்பப் பெறுங்கள் என்று ஒரு முதல்வரே வேண்டுகோள் விடுத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தை திரும்ப பெற்ற பிறகு, அவர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. இது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை; பணி ஓய்வும் கிடைக்கவில்லை. ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும், அடுக்கடுக்காக தொடர்ந்து இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி, முதல்வர் பழனிசாமி எதை சாதிக்க போகிறார்? எனவே, கொரோனா பேரிடருக்காக தங்களின் ஒரு நாள் ஊதியமாக 150 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அளித்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான உணர்வினை கொச்சைப்படுத்தி நிந்திக்காமல் ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்வரை கேட்டு கொள்கிறேன். தமிழ் மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி அமைந்ததும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Source Tamil Murasu