Type Here to Get Search Results !

அஜீரணம் ஏற்படுவது ஏன்? காரணங்கள் என்ன? அஜீரணத்தைத் தவிர்க்க என்ன வழி?*அஜீரணம் ஏற்படுவது ஏன்?

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் உண்டாகின்ற ஒரு முக்கியமான வயிற்றுத் தொல்லை. இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் உலகில் சுமார் 60 சதவிகிதம் பேர் அஜீரணத்தால் அவதிப்படுகிறார்கள் என்றால் இது எவ்வளவு சாதாரணமாக மக்களை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய நான்கு இடங்களில் செரிமானமாகிறது என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். உணவு செரிமானமாவதற்குச் செரிமானப் பாதையில் உற்பத்தியாகின்ற என்சைம்கள் அடங்கிய செரிமான நீர்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் போன்றவை உதவுகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். ஓர் ஆரோக்கியமான நபருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் குறிப்பிட்ட நேரத்தில் தேவையான அளவிற்குத் தேவையான இடத்தில் சுரந்து `செரிமானம்’ எனும் அற்புதப் பணியைச் சரியாகச் செய்து முடிக்கின்றன.

*அஜீரணம் என்பது என்ன?*

சில அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகின்ற குறைபாடு களால் அல்லது நோய் நிலைகளால் இந்தச் செரிமான நீர்கள் சுரப்பதில் தவறுகள் நேரலாம். அப்போது செரிமானப் பணிகளில் இயல்புநிலை மாறிவிடும். இதனால் இந்த வேதிப்பணிகளில் மாறுபாடுகள் தோன்றும். இதன் விளைவாக செரிமானம் தடைபடும். இதையே அஜீரணம்’ என்று கொச்சைத் தமிழிலும் `செரிமானமின்மை’ (Indigestion) என்று நல்ல தமிழிலும் அழைத்து வருகிறோம்.

*முக்கிய எச்சரிக்கை..


அஜீரணத்தை அலட்சியம் செய்யக்கூடாது. ஆரம்பநிலையிலேயே அதற்குத் தகுந்த சிகிச்சையைப் பெற்றுவிட வேண்டும். ஏனென்றால் இது பல நேரங்களில் வயிற்றில் உள்ள உள்ளுறுப்பு நோய்களின் ஆரம்ப நோய்க்காட்டியாகத் தோன்றும். முப்பது வயது பொறியாளர் ஒருவர் அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்பட்டார். ஆனாலும், அவர் முதலில் மருத்துவரிடம் செல்லவில்லை. சில விளம்பரங்களை நம்பி அவராகவே மருந்துக்கடைகளில் கிடைக்கும் நாட்டு மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு அவ்வப்போது அஜீரணம் சரியாவதும் மீண்டும் தலைதூக்குவதுமாக இருந்தது. பின்பு அஜீரணத்தோடு வயிற்றுவலியும் வரத்தொடங்கியது. அப்போதும் அவர் கவலைப்படவில்லை. அலட்சியமாகவே இருந்தார். ஆனால், அவருடைய மனைவி பயந்துவிட்டார். உடனே மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபோது அவருக்குக் கணைய அழற்சி’ (Panctreatitis) இருந்தது தெரியவந்தது. அது ஆரம்பநிலையில் இருந்ததால் மருத்துவச் சிகிச்சையில் குணமானது. இதுவே இன்னும் சில காலம் கவனிக்காமல் விட்டிருந்தால் கணையம் கெட்டுப்போயிருக்கும். அறுவை சிகிச்சை தேவைப்பட்டிருக்கும்.

பொதுவான அறிகுறிகள் சாதாரணமாக நாம் அனைவருமே அஜீரணத்தை அடையாளம் கண்டு கொள்வது எளிது. உணவு உண்டபின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக்குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள். அதேநேரத்தில் அஜீரணத்தின் காரணத்தையும் நாம் தெரிந்து கொண்டால் அதற்கு உடனடியாகத் தகுந்த சிகிச்சை பெற்று நம் ஆரோக்கியம் கெடாமல் தடுத்துக் கொள்ளலாம்.

*பொதுவான காரணங்கள்..

அஜீரணத்திற்கு முக்கிய காரணம், அசாதாரண உணவு. அதிக காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப்படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்திற்கு வழி அமைக்கும். சிலருக்கு சில உணவுப் பொருட்களால் – குறிப்பாக அளவுக்கு மீறிய ஊறுகாய், மிளகாய், வற்றல் போன்றவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம் உண்டாகும். விருந்து மற்றும் விழாக்கால நேரங்களில் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் அஜீரணம் ஏற்படும். எண்ணெயில் வறுத்த மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகள் மற்றும் அப்பளம், வடை, இனிப்புப் பண்டங்கள், நெய், வெண்ணெய், டால்டா போன்றவற்றை விரும்பி உண்டால் இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து இரைப்பையின் மேற்பரப்பில் மிதக்கும். இதன் விளைவாக செரிமான நீர்கள் இரைப்பையில் இயல்பாகச் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்தை வரவேற்கும். அதிக அளவு காபி, தேநீர் சாப்பிடுவது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை போடுவது, பான்மசாலா பயன்படுத்துவது, விரைவு உணவுகளை அடிக்கடி உண்பது, காற்றடைத்த மென்பானங்களை அளவின்றி குடிப்பது போன்றவையும் அஜீரணம் ஏற்பட காரணமாகலாம்.

நச்சுணவு தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு நன்றாகச் சுத்தம் செய்யத் தவறினால் அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் குடலுக்குள் நுழைந்து நோய்த்தொற்றை உண்டாக்கும். அப்போது அந்த நோயின் துவக்க அறிகுறியாக அஜீரணம் தலைகாட்டும். மாசுபட்ட குடிநீரை பயன்படுத்தினாலும், உணவைச் சமைக்கும்போது சுத்தம் கடைப்பிடிக்கத் தவறினாலும், சமையல் பாத்திரங்களில் உலோகக் கலவை சரியில்லை என்றாலும் இதே நிலைமை ஏற்படும். அசுத்தமான சமையலறையில் சமைப்பது, கைவிரல் நகங்களில் அழுக்குடன் சமைப்பது, அடிக்கடி உடலைச் சொறிந்து கொண்டும் வியர்வையைத் துடைத்துக் கொண்டும் சமைப்பது, சுகாதாரம் குறைந்த அசுத்தமான உணவுவிடுதிகளில் தொடர்ந்து உணவு சாப்பிடுவது போன்றவற்றால் செரிமானப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டு அஜீரணம் தோன்றும். குழந்தைக்கு பால் புட்டியை சரியாக சுத்தம் செய்யாமல் பால் புகட்டினால் குழந்தைக்கு அஜீரணம் ஏற்படும்.

கலப்பட உணவுகள் உணவு தயாரிக்கும்போது கலப்பட எண்ணெய் மற்றும் கலப்பட உணவுப்பொருட்களைப் பயன்படுத்துதல் அஜீரணத்தை வரவேற்கும். உணவைச் சரியான அளவில் வேகவைத்துச் சமைக்காவிட்டாலும் இதே நிலைமை ஏற்படும். வயதிற்கு மீறி சத்து மிகுந்த உணவு சாப்பிடுவதும், வயதிற்குத் தேவையான சத்து இல்லாத உணவு சாப்பிடுவதும், குறிப்பாக நார்ச்சத்து குறைந்த உணவுகளைச் சாப்பிடுவதும் அஜீரணத்திற்கு வழி அமைக்கும்.

நேரந்தவறிய உணவு அதிகாலையில் எழுந்து வெகுதூரம் பயணித்து வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள், மருத்துவப் பிரதிநிதிகள் போன்றோர் பெரும்பாலும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இவர்கள் நேரம் தவறி உண்ணும்போது இவர்களுக்குக் குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படுகிறது. இதுபோலவே உணவை அவசர அவசரமாக உண்பவர்களுக்கு உமிழ்நீருடன் உணவு சரியாக கலக்காத காரணத்தால் அஜீரணம் தோன்றுகிறது.

மனநிலை முக்கியம் நாம் உணவு உண்ணும்போது மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் உண்ண வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாக செரிமானமாகும். மனக்கவலை, மன அழுத்தம், கோபம், எரிச்சல், வெறுப்பு, சண்டை போன்ற உளக்கோளாறுகளுடன் உணவு உண்டால் உணவு செரிமானம் குறையும். தேவையான தூக்கமின்மை, ஓய்வின்மை, நாட்பட்ட பயணம் போன்றவற்றாலும அஜீரணம் ஏற்பட வாய்ப்புண்டு.

உடல் கோளாறுகள் ஏற்கனவே கூறியது போல் உடலில் உள்ள சில கோளாறுகளின் ஆரம்ப அறிகுறியாக அஜீரணம் ஏற்படும். உணவுக்குழாய் அழற்சி, உணவுக்குழாய் புற்று, இரைப்பை அழற்சி, இரைப்பைப்புண், இரைப்பைப்புற்று, குடல்புழுக்கள், அமீபா மற்றும் கியார்டியா தொற்றுகள், மஞ்சள் காமாலை உள்ளிட்ட கல்லீரல் நோய்கள், பித்தப்பைக் கோளாறுகள், குடல்கட்டிகள், மூலநோய், காசநோய், ரத்தசோகை, சர்க்கரைநோய், கணைய அழற்சி, கணையப்புற்று, ஒற்றைத்தலைவலி, கண்அழுத்தநோய், மூளைநோய், சிறுநீரகநோய், இதயநோய், நரம்புமண்டல நோய், காதுநோய், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட எல்லாவகைத் தொற்றுக்காய்ச்சல்கள் போன்றவை இந்தப் பட்டியலில் சேரும்.

இதர காரணங்கள் முதியோர்களுக்கு முதுமை காரணமாக இயல்பாகவே செரிமான நொதிகள் சுரப்பது குறையும். இதனால் இவர்களுக்கு அஜீரணம் தலைகாட்டும். கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று கர்ப்ப மாதங்களில் நிகழும் இயக்குநீர் மாற்றங்களால் அஜீரணம் தோன்றும். தினமும் சரியான நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் அஜீரணம் நிரந்தரம். அடிக்கடி தலைவலி மாத்திரைகள், பேதி மாத்திரைகள் அல்லது மலமிளக்கி மாத்திரைகளைப் பயன்படுத்துவோருக்கும் அஜீரணம் ஏற்படுவது உறுதி. போதிய உடற்பயிற்சி இல்லாதவர்கள், தொடர்ந்து வெகுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் போன்றோருக்கும் அஜீரணம் தோன்ற வாய்ப்புண்டு.

*என்ன செய்ய வேண்டும்?

அஜீரணத்திற்கு நீங்களாகவே நெடுங்காலம் சுயமருத்துவம் செய்யாதீர்கள். அஜீரணம் ஏற்பட்டதுமே மருத்துவரிடம் சென்று அஜீரணம் சாதாரணமானதா, ஏதேனும் நோயின் அறிகுறியா என்பதைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். மிக எளிய மலப்பரிசோதனையிலிருந்து இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனை’ வரை பல பரிசோதனைகள் இதற்கு உள்ளன. மருத்துவர் உங்கள் தேவைக்கேற்ப பரிசோதித்து நோயைக் கணிப்பார். தகுந்த சிகிச்சை அளிப்பார்.

*அஜீரணத்தைத் தவிர்க்க என்ன வழி?

அடுத்து, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட சத்துள்ள உணவுகளை அளவோடும் நேரத்தோடும் நிதானத்தோடும் மனநிறைவோடும் உட்கொள்ளுங்கள். அதிக காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப் போன்றவற்றை சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் உங்கள் உணவில் தினமும் இருக்கட்டும். இரவில் தினமும் இரண்டு வாழைப்பழங்களை உண்ணுங்கள். வயதானவர்கள் வயிற்றில் வாயுவை உருவாக்கும் மொச்சை, பயறு, பட்டாணி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அவசியம்.


Top Post Ad

Below Post Ad