ஈரடியால் உலகளந்து ஈர்த்தார் உள்ளம்!
.......ஈடிலாத குறள்தந்து ஏற்றம் தந்தார்!
பாரகத்தில் அனைவருக்கும் பாதை இட்டார்!
.......பாதைவழி நடப்போர்க்குப் பண்பை ஈந்தார்!
வீரத்தை ஈரத்தை வாகாய்ச் சேர்த்தார்!
.......விரும்புகிற வளத்தோடு வடிவ மாக்கி
பேரன்பாய் அனைவருக்கும் பிணிதீர் முப்பால்
......பேதமின்றிப் பரிந்தூட்டிப் பெற்றாள் ஆனாள்!
(1)
அறத்தோடு பொருளின்பம் அழகாய்க் கூட்டி
.......அருந்தமிழில் குறள்வடிவில் அறநூல் ஆக்கி
புறவாழ்வு அகவாழ்வு புலரும் வண்ணம்
.......பொதுமறையாய்த்
திருக்குறளைப் பொங்கித் தந்தார்!
திறன்கொண்ட வள்ளுவரின் திருநூல் கொண்டு
.......திருத்தமுடன் வாழ்ந்திடலாம் தெளிவைப் பெற்று!
பறவையினம் சிறகாலே பறத்தல் போல
.......பறந்திடலாம் குறட்சிறகால் பாரில் நாமே!
(2)
எதனைத்தான் விட்டுவிட்டார் எங்கள் அய்யன்?
........என்றாய்ந்தால் எதுவுமில்லை என்பதே மெய்யாம்!
இதமான சொல்லெடுத்து இனிமை சேர்த்து
......இருவரியாய்க் குறளமுதம் இனிதாய் ஊட்டி
பதமாக வாழ்ந்திடவே பரிசாய்த் தந்தார்!
......பல்லோரும் போற்றுகின்ற படியாய் அவர்தான்
முதன்முதலாய் பொதுமறையாய் முப்பால் தந்தார்!
....... முத்தமிழின் சிறப்பினைவான் முட்டச் செய்தார்!
(3)
*த.ஏமாவதி
*கோளூர்