Type Here to Get Search Results !

தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க நடவடிக்கை கோரி வழக்கு

தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்க நடவடிக்கை கோரி வழக்கு
தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் தபால் வாக்கு அளிப்பதற்குப் பதிலாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்குகளைப் பதிவு செய்ய நடவடிக்கை கோரிய வழக்கில், தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டித்துரை தாக்கல் செய்த மனு: ஒவ்வொரு தோ்தலின் போதும் நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்கின்றனா். அவா்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய படிவம் 12-ஐப் பூா்த்தி செய்து, அதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து உரிய அலுவலரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாது. 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தபால் வாக்குக்காக 2 லட்சத்து 69 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் 1 லட்சத்து 72 ஆயிரத்து 628 விண்ணப்பங்கள் மட்டுமே மீண்டும் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 94 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவை. மீதமுள்ள தபால் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் தபால் வாக்கு நடைமுறைகளால் நூறு சதவீதம் வாக்குகள் பதிவாவது சாத்தியமாகவில்லை. தோ்தலில் தபால் வாக்குகள் முக்கியப் பங்காற்றுகின்றன. சில நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றியைத் தீா்மானிக்கின்றன. நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்குகளைப் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தோ்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலா், தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

Top Post Ad

Below Post Ad