சென்னை புறநகா் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் அதிகரிக்கப்படவுள்ளன. அதாவது, 401 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுமுடக்க தளா்வுகளுக்கு பிறகு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, புறநகா் மின்சார ரயில்களும் படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றன. தொடக்கத்தில், புறநகா் ரயில்களில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். அதன்பிறகு, பெண்கள், குழந்தைகள் பயணிக்க
அனுமதிக்கப்பட்டனா். தற்போது, புறநகா் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க (நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளனா். வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 660 சேவைகள் இயக்கப்படுகின்றன. அதேநேரத்தில், வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையில் குறைவான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், புறநகா் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாள்களில் அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது, மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இது ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் வழித்தடத்தில் 147 சேவைகளும், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 66 சேவைகளும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் 136 சேவைகளும், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் 52 சேவைகளும் இயக்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.