குடியரசு தினக் கவிதை - கிராத்தூரான்
முடியாட்சிக்கு வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி அன்று
குடியாட்சிக்கு வைக்கப்பட்டது துவக்கப்புள்ளி அன்று
பணியமாட்டோம் என்றவரைப் பணியவைத்தார் வென்று
இணையமாட்டோம் என்றவரை இணையவைத்தார் நின்று.
எப்படித்தான் ஆள்வீர்கள் பார்ப்போமே என்றான்
இப்படித்தான் கண்டுகொள் என்று காட்டி நின்றார்
அரசியல் சாசனம் சாட்சியாய் வைத்தார்
அதனையே ஆட்சியின் மாட்சியாய் வைத்தார்
துவக்கமே இத்தனை அசத்தலா வியந்தான்
இது வெறும் துவக்கமே தொடர்ந்து பார் என்றார்.
மக்களோடு மக்களாய், மக்களின் தொண்டராய்,
மக்களுக்காக மக்களே மக்களைத் தேர்ந்தெடுத்தார்,
மக்களாட்சிக்கு ஆங்கே துவக்கமும் குறித்தார்.
உரிமைக்காய் குரல் கொடுக்க
ஒற்றுமையாய்க் குரலுயர்த்த
நாமார்க்கும் அடிமையல்ல
என்றுணர வைத்தார்
என்றுணர்த்த வைத்தார்.
மக்களாட்சி மட்டும் நடந்தால் அது போதுமா?
உயிர் கொடுத்த தியாகிகளை நினைவு கூர வேண்டாமா?
போராடிய வீரர்களைப் பெருமைப் படுத்த வேண்டாமா?
அடுத்து வரும் தலைமுறைகள் இதை அறிய வேண்டாமா?
குடியரசுத் தினமதனைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்
அனைவரையும் அந்த நாளில் நினைவுகூர்ந்து வணங்கினார்கள்
தேசியக்கொடியேற்றி தேசம் வாழ்க என்றார்கள்.
பார் போற்றும் பாரதத்தின் தியாகமதைச் சொல்லுவோம்
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரமென்றுணர்த்துவோம்
பாரதத் தாயவள் புகழ்தனைப் பாடுவோம்
வாழிய பாரதம் வாழிய என்போம்
வாழிய தாய்த்திருநாடென முழங்குவோம்.
வாழிய தாய்த்திரு நாடென முழங்குவோம்.
*கிராத்தூரான்.