தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் அது 59 வயதாக உயர்த்தப்பட்டது. இதனால், ஓய்வுபெறும் தருவாயில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் பயன்பெற்றனர்.
இந்த நிலையில், அவர்களின் ஓய்வுபெறும் வயது மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அதாவது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது, வரும் மே மாதம் 31-ந்தேதி வரை ஓய்வு பெறும் நிலையில் இருந்த பணியாளர்களுக்கு பொருந்தும்.
இது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வுபெறும் வயது, 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.
மே மாதம் வரை பொருந்தும்
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே மாதம் 31-ந்தேதி அன்று பணியில் இருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.