Type Here to Get Search Results !

சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக 7 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை

சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக 7 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படுகிறது


உத்தரபிரதேசத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் சலீம் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு ஷப்னமின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த ஷப்னம், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஷப்னமையும், சலீமையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2015-ம் ஆண்டும் உறுதி செய்தன.
மேலும் ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
மதுராவில் உள்ள சிறையில் பெண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தனி அறை உள்ளது. இந்த அறை 150 ஆண்டுகளுக்குமுன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்தபிறகு பெண் குற்றவாளிகள் யாரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில் தான் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு மைத்ரேயா கூறியதாவது:-
மதுரா சிறையில் உள்ள ஷப்னமை தூக்கில் போடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி உள்ளோம். நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் இந்த தூக்கு மேடையை 2 முறை நேரில் ஆய்வு செய்துள்ளார்.
ஆனாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் தேதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுதந்திரத்திற்குபிறகு தூக்கிலிடப்பட்ட முதல் பெண்ணாக அவர் இருப்பார்.

Tags

Top Post Ad

Below Post Ad