சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலில் மக்கள் விரைவாக அலுவலகம் சென்றடையக் கடந்த 5 ஆண்டுகளாக மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயிலின் முதல் கட்டம் 54 கிலோமீட்டருக்கு முடிக்கப்பட்டு பயணிகள் சேவை நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அதனைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
மெட்ரோ கட்டணம்
4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 20 ரூபாய் கட்டணத்தில் 5 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதேபோல், 30 ரூபாய் கட்டணத்தில் 6 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்ற நிலையில், தற்போது 30 ரூபாய் கட்டணத்தில் 12 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதாவது பழைய கட்டணத்தில் தற்போது இருமடங்கு தூரம் பயணம் மேற்கொள்ளும் வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 ரூபாய் கட்டணத்தில் 18 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்ற நிலையில் தற்போது 50 ரூபாய் கட்டணத்தில் 32 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். மேலும், அதிகபட்ச கட்டணம் 70 ரூபாய் இருந்தது தற்போது அதிகபட்ச கட்டணம் வெறும் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.