தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள சூழலில் உரிய ஆவணங்களைக் காட்டி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தைக் கொண்டு செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டும் பணம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாகக் கொண்டுசெல்ல அனுமதிக்கக் கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பொதுப்பணித் துறை , நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம் , ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்க வாரம் குறைந்த பட்சம் 2 லட்ச ரூபாய் ரொக்கம் கொண்டு செல்லப்படுகிறது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உரிய ஆதாரங்களைக் காட்டி, கூடுதல் பணத்தை எடுத்துச் சொல்லலாம் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.