Type Here to Get Search Results !

6 சட்டசபை தொகுதிகளில் ஒரே பெயரில் போட்டியிடும் வேட்பாளர்களால் குழப்பம்

சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்களின் பெயரிலேயே பல சுயேட்சை வேட்பாளர்களும், போட்யிடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இதனால் வாக்காளர்கள் இடையே பெயர் குழப்பம் உருவாகி தான் விரும்பிய வேட்பாளர்களுக்கு பதிலாக அதே பெயர் கொண்ட வேறு வேட்பாளர்களுக்கு ஓட்டு போடும் சூழ்நிலை உருவாகிறது.

இந்த ஓட்டுகள் கூட திடீரென்று முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தான் போட்டியிட்ட தொகுதியில் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

அந்த தொகுதியில் திருமாவளவன் என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டார். அவர் 289 ஓட்டுகளை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போது முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஹாக்கி மட்டை மற்றும் பந்து சின்னத்தில் போட்டியிடுகிறார். இது அந்த தொகுதியில் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் ராமச்சந்திரன் என்ற பெயரில் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள்.

ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக தேவராஜி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் தேவராஜி என்ற பெயரில் 2 பேர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். அதே தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.சி.வீரமணி போட்டியிடுகிறார்.அதே தொகுதியில் வீரமணி என்ற பெயரில் 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

தர்மபுரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக சுப்பிரமணி போட்டியிடுகிறார். அதே தொகுதியில் சுப்பிரமணி என்ற பெயரில் 3 பேர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். அதே தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக வெங்கடேஷ்வரன் போட்டியிடுகிறார். அங்கு அவரது பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் நிற்கிறார்.

சிங்காநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக என்.கார்த்திக் போட்டியிடுகிறார். அங்கு என்.கார்த்திக் என்ற பெயரில் 2 பேர் சுயேட்சையாக நிற்கிறார்கள்.

ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக தங்கபாண்டியன் போட்யிடுகிறார். அங்கு தங்க பாண்டியன் என்ற பெயரில் 2 பேர் சுயேட்சையாக நிற்கிறார்கள்.

6 தொகுதிகளிலும் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் நிற்பதால் வாக்காளர்கள் இடையே பெயர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Source Maalaimalar

Top Post Ad

Below Post Ad