கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும், பாடத்திட்டத்தில் மற்றும் வேளாண்மையை ஒரு பாடமாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் நேற்று அறிவாலயத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. இதில்,
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பெறும் வகையில் காலை வேளையில் பால் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* * மூன்றாண்டுகளுக்குள் தமிழ்நாடு நூறு சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாவதற்கு உரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு விரைவாகச் செயல்படுத்தப்படும்.
* அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் இடம்பெறச் செய்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதற்குத் தேவையான பயிற்சி அளிக்கக் கூடிய வகையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டன. இப்போதைய அதிமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்டி பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு உரிய பயிற்சி வகுப்புகள் நடத்திட ஆவன செய்யப்படும்.
* பள்ளிக் கல்வியில் பிரச்சினைகள் குறித்தும், வேளாண்மை குறித்தும் அடிப்படைத் தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மற்றும் வேளாண்மையை ஒரு பாடமாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* உடற்பயிற்சிக் கல்விக்கென வாரம் மூன்று பாடவேளைகளாவது ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு மொழிவழிச் சிறுபான்மையினர் தங்களுடைய தாய்மொழியையும் பயில்வதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.