கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாளை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு அன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பொன்னேரி வருவாய்க் கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோயில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொன்னேரி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமைகள் தோறும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், கரோனா பரவல் காரணமாக பிரதி செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்தார். நாளை மறுநாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என்பதாலும் அன்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் வழக்கமான வழிபாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகம் நடத்திக்கொள்ளலாம் என்றும் எக்காரணம் கொண்டும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.