Type Here to Get Search Results !

முதல்வர் ஸ்டாலின் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.


தமிழக முதல்வர் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார். நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 09) நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ.890 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட தொகுப்பினை சுமார் 200 பேருக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“கரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற உதவிகளை சேவையாகச் செய்து வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மாணவர்களுக்குக் கல்வி மிக முக்கியம். தற்போது கரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதால், கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதிலும், 40 சதவீதம் கட்டணத்தை மட்டுமே தற்போது வசூலிக்க வேண்டும். பாக்கியுள்ள தொகையைப் பள்ளிகள் திறந்தபிறகு 2 மாதங்கள் கழித்து வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அரசு உத்தரவை மீறி ஒருசில தனியார் பள்ளிகள் 100 சதவீதக் கட்டணமும், சில பள்ளிகள் 75 சதவீதத்தை ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் எனவும் பெற்றோரை வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் இருந்து புகார்களும் வந்துள்ளன. எனவே, அரசு உத்தரவை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால், சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், அதன் பிறகு 2017-18ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை அரசு ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது. நீட் மட்டும் அல்ல, எந்த ஒரு நுழைவுத்தேர்வும் தமிழகத்துக்குள் வராமல் இருக்க திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும். கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் சரிசெய்யப்படும். தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ளேன். மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி அரசுப் பள்ளிகள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், கலை ஆகியவற்றைக் கற்றுத்தர அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்வருடன் கலந்து பேசி அதற்கான அறிவிப்பு வெளியாகும். தமிழக அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அறிக்கையை முதல்வர் அலுவலகத்துக்கு தினமும் சமர்ப்பித்து வருகிறோம்.

தமிழக முதல்வர் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார். நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம். தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. கரோனா 3-வது அலை பரவல் குறித்து சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளதால், பள்ளிகள் திறப்பு குறித்து சுகாதாரத்துறையினரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் இம்மாதம் இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), மாவட்டக் கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முனிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top Post Ad

Below Post Ad