Type Here to Get Search Results !

உலகின் மிகப்பெரிய பொய்


நன்றி குங்குமம் டாக்டர் 




மருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் காலம்காலமாக உண்டு. அவற்றில் சாதாரண மனிதர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளைத் தாண்டி, மருத்துவ உலகிலும் சில நம்பிக்கைகள் நிலவி வருவதைப் பார்க்கிறோம். அதில் ஒன்றுதான் தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பதும்... ஆனால், இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 




சர்வதேச அளவில் அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவினால் நன்மை உண்டு. அதனை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். இதனை கண்டறியும் பொருட்டு ஆராய்ச்சியில் இறங்கியது Global Burden of diseases, Injuries and Risk factors study(GBD) என்ற அமைப்பு. 




உலகமெங்கும் உள்ள முக்கியமான 195 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆண், பெண் இருபாலருமாக 7 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். 1990-ம் ஆண்டு முதல் 2016 வரையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், இறுதியாக 694 தகவலறிக்கைகள் தயாரானது. இவற்றில் இருந்து கிடைத்த முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலேயே இருந்தது. மது அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு  அபாயம் அதிகம் என்பதையே புரிய வைத்தது. 




ஒரு துளி மதுவாக இருப்பினும், ஒரு கோப்பை மதுவாக இருப்பினும் அதன் தீய விளைவுகள் ஒன்றுதான். சம்மந்தப்பட்டவரின் மரபியல் காரணிகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றின் காரணமாக பாதிப்பின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படலாமே ஒழிய, பாதிப்பே ஏற்படாது என்று இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 











'ஒயின் வகை மதுக்கள் திராட்சைப் பழங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. எனவே, திராட்சையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் உடலுக்கு நன்மை செய்யும் என்ற கோணத்தில் மது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவி இருக்கிறது. அதற்கு பதிலாக நேரடியாகவே திராட்சையை உண்டு வந்தால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும். மதுவால் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை அண்டாது' என்று பரிந்துரைத்திருக்கிறது GBD Study. மிக முக்கியமான இந்த ஆய்வு முடிவு Lancet மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது.




-  ஜி.ஸ்ரீவித்யா



Top Post Ad

Below Post Ad