Type Here to Get Search Results !

ஒருவார காலதாமதத்துக்குப் பிறகு தென்மேற்கு பருவ மழை தொடங்கியது; கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை



ஒரு வார கால தாமதத்துக்கு பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நேற்று தொடங்கியது. இதையொட்டி இம்மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாத காலம் தென்மேற்கு பருவமழைக் காலம் ஆகும். இந்தியா பெறும் மழையளவில் சுமார் 75 சதவீதம் தென்மேற்கு பருவ மழைக் காலத்தில்தான் கிடைக்கிறது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். இது படிப்படியாக முன்னேறி கடலோர கர்நாடகாவில் ஜூன் முதல் வாரத்திலும் மும்பை மற்றும் கொங்கன் கடற்கரை பகுதியில் ஜூன் இரண்டாவது வாரத்திலும் தொடங்கும். தலைநகர் டெல்லியில் ஜூன் 29-ம் தேதி பருவ மழை தொடங்கும்.


கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நல்ல மழைப்பொழிவை கொடுக்கும். இந்நிலையில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. இதையடுத்து ஒருவார காலதாமதத்துக்கு பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்தது.


இதுதொடர்பாக இதன் மூத்த வானிலை ஆய்வாளர் எம்.மொகபத்ரா நேற்று கூறும்போது, “பருவநிலைக்கு முந்தைய மழைப்பொழிவு கடந்த 48 மணி நேரத்தில் நல்ல அளவில் இருந்தது. எனவே தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக அறிவிக்கிறோம். அடுத்த 48 மணி நேரத்துக்கு கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றாலும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகியுள்ளது.


இது, தென்மேற்கு பருவக் காற்று இந்தியாவின் மேற்கு கடற்கரையை நோக்கி முன்னேறிச் செல்வதை தடுக்க வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்தால், பருவக்காற்று முன்னேறிச் செல்ல உதவியாக இருக்கும். மாறாக ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்தால் பருவக் காற்றின் முன்னேற்றம் தற்காலிகமாகத் தடைபடும்” என்றார்.


கேரளாவில் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவுகிறது. அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.


பருவமழை தாமதம் காரணமாக விதைப்பு பணியை குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு தாமதமாக மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. வடஇந்திய சமவெளிப் பகுதி, மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி வரை உயர்ந்தது. இம்மாநிலத்தின் சுரு பகுதியில் கடந்த வார தொடக்கத்தில் 50.3 டிகிரி வெப்பநிலை பதிவானது.


டெல்லியில் 45 டிகிரி வெப்பநிலையுடன் அனல் காற்றும் வீசி வருகிறது. பருவ மழை தொடங்கும் வரை இங்கு வெப்ப நிலை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. பருவ காலத்துக்கு முந்தைய 3 மாத கால மழைப்பொழிவு இந்த ஆண்டு வழக்கத்தை விட 25 சதவீதம் குறைவாக இருந்தது. இதனால் நாடு முழுவதிலும் பரவலாக குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்நிலையில் பருவமழை எப்போது தொடங்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நேற்று முடிவுக்கு வந்தது.


இந்த ஆண்டு பருவமழை வழக்கமான அளவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவ மழை தொடங்குவதில் ஏற்படும் தாமதத்துக்கும் மழைப்பொழிவின் அளவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. என்றாலும் இந்த தாமதம் காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலும் பருவமழை தாமதமாகவே தொடங்கும்.


டெல்லியில் வழக்கமாக ஜூன் 29-ம் தேதி பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு 2 அல்லது 3 நாட்கள் பருவ மழை தாமதமாகத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு டெல்லியில் வழக்கமாக மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியாவிலும் வழக்கமான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. கடந்த 2016-ம் ஆண்டிலும் தென்மேற்கு பருவ மழை இதே நாளில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Top Post Ad

Below Post Ad