Type Here to Get Search Results !

கர்நாடக மாநிலத்தில் 4வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றார் எடியூரப்பா



கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, பா.ஜனதாவில் சக்தி வாய்ந்த தலைவர் ஆவார். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகாவில் உள்ள பூகனகெரே கிராமத்தில் பிறந்தார். 1965-ம் ஆண்டு சமூக நலத்துறையில் கிளார்க் பணியை தொடங்கினார். பிறகு அந்த அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு, சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு அரிசி ஆலையில் பணிக்கு சேர்ந்தார்.


1967-ம் ஆண்டு மைத்ரிதேவி என்பவரை அவர் திருமணம் செய்தார். அவர் அந்த அரிசி ஆலை உரிமையாளரின் மகள் ஆவார். 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு எடியூரப்பாவின் மனைவி இறந்தார். 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராகவும், 1975-ம் ஆண்டு அதே டவுன் பஞ்சாயத்தின் தலைவராகவும் எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


நெருக்கடி காலத்தில் சிறையில் தள்ளப்பட்டார். 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 1988-ம் ஆண்டு கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். முதல் முறையாக அவர் 1983-ம் ஆண்டு கர்நாடக சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் கர்நாடக மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


2004-ம் ஆண்டு தரம்சிங் முதல்-மந்திரியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவராக எடியூரப்பா பணியாற்றினார். அந்த ஆட்சியில் திடீரென பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இதனால் தரம்சிங் முதல்-மந்திரி பதவியை இழந்தார். கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். ஒப்பந்தப்படி 20 மாதங்களுக்கு பிறகு எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ஏற்றார். ஆனால் 7 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று 3 ஆண்டுகள் பணியாற்றினார். கனிம சுரங்க முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


கட்சியில் சக்தி வாய்ந்த தலைவரான அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க பா.ஜனதா பெரும்பாடு பட்டது. அவரை அவ்வளவு எளிதாக பதவியை விட்டு நீக்க முடியவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு அவர் பதவி விலகினார். அதன் பிறகு கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய எடியூரப்பா, மீண்டும் தாய் கட்சிக்கே திரும்பினார்.


மீண்டும் வந்த பிறகும் கூட பா.ஜனதாவில் எடியூரப்பா என்ன சொல்கிறாரோ அது நடக்கும் நிலை இருக்கிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் எடியூரப்பாவின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு 2, 3 தொகுதிகளுக்கு கட்சி மேலிடம் நேரடியாக வேட்பாளர்களை அறிவித்தது. இது கட்சியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தினாலும், மோடி அலையை மனதில் வைத்து எடியூரப்பா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மை எண்ணிக்கைக்கு அருகில் வந்தது. ஆனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றது. அப்போது பெரும்பான்மை இல்லாதபோதும், அவசரகதியில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மூன்றே நாட்களில் அவர் பதவியை இழந்தார். இது பா.ஜனதாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.


15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23-ந் தேதி கவிழ்ந்தது.


இதையடுத்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டார். இது தொடர்பாக கட்சி தலைமையின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும், உத்தரவு கிடைத்த பின் கவர்னரை சந்திக்கப் போவதாகவும் அவர் நேற்று முன்தினம் (ஜூலை 24) அறிவித்திருந்தார். நேற்று சுயேட்சை மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில், இன்று எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து மாலை 6 மணிக்கு கர்நாடகா முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார் .


அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டும் பதவியேற்றுக்கொண்டார். முதல்-மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா வாழ்த்து தெரிவித்தார். 4-வது முறையாக எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று மாலை பதவியேற்றாலும் ஜூலை 31-ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவிற்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


Top Post Ad

Below Post Ad