காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
தினந்தோறும் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
இதுவரை சயன கோலத்தில் (படுத்த நிலையில்) காட்சி அளித்த அத்தி வரதர், நாளை முதல் (வியாழக்கிழமை) நின்ற நிலையில் அருள்பாலிக்க உள்ளார். ஆகஸ்டு 17-ந் தேதி வரை அவர் காட்சி அளிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் பக்தர்களின் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பொது தரிசன பாதையான கோவிலின் கிழக்கு வாசல் இன்று மதியம் 12 மணியுடன் மூடப்பட்டது.
இதேபோல் முக்கிய பிரமுகர்கள் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மதியம் 3 மணிக்கு பின்னர் முக்கிய பிரமுகர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கோவிலுக்குள் இருந்தவர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் வெளியே வந்ததும் மாலை 5 மணிக்கு பின்னர் சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதர் சிலைக்கு பூஜைகள் செய்து நின்ற கோலத்தில் வைக்கிறார்கள். சிறப்பு அலங்காரம், பூஜைகள் முடிய சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் ஆகும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.
நாளை காலை 5 மணி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசிக்கலாம்.
அத்திவரதரை நின்ற கோலத்தில் முதல் நாளில் தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள லாட்ஜூகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி விட்டன.
கோவில் வளாகத்திலும் திரளான பக்தர்கள் காத்து கிடக்கிறார்கள். இதனால் கோவில் முழுவதும் மனித தலைகளாக காட்சியளிக்கிறது. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசனம் செய்ய உள்ளனர்.
விழாவின் 31-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசித்தார்.
இதன்பிறகு அடுத்த 40 ஆண்டுகள் கழித்து 2059-ம் ஆண்டில் தான் அத்திவரதரை சயன கோலத்தில் காண முடியும் என்பதால் காஞ்சிபுரம் நகரில் இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர்.
நாளை வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து கோவிலில் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கூட்ட நெரிசலை தடுக்க குறிப்பிட்ட அளவில் பக்தர்களை நிறுத்தி, நிறுத்தி கோவிலுக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.