'தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப் படும்' என, மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.'சுற்றுச்சூழல் மாசு படுவதை தவிர்க்கும் வகையில், தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்' என, 2018ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று, 2018 தீபாவளி நாளில், தமிழகத்தில், காலை, 6:00 மணி முதல், 7:00 மணி; மாலை, 7:00 மணி முதல், 8:00 மணி வரை என, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க, அரசு அனுமதி அளித்தது.இது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது; தடையை மீறி, பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து, மகிழ்ந்தனர். தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை, 27ம் தேதி கொண்டாடப் படுகிறது. இந்தாண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு போல இந்தாண்டும், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என, தீபாவளி நாளில், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, அனுமதி வழங்கப்படும். அனுமதி மீறி பட்டாசு வெடிப்போர் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பர். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.