கன்னியாகுமரி அருகே இன்ஜினியர் வங்கி கணக்கை ஹேக் செய்து 3.74 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் பிரபின் பெலிக்ஸ் ராஜன். இன்ஜினியரான இவர் கடந்த ஏழு வருடங்களாக நைஜீரியாவில் உள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி சொந்த ஊர் வந்து செல்லும் பிரபின் பெலிக்ஸ் ராஜன் கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி ஒரு மாத விடுப்பில் சொந்த ஊர் வந்துள்ளார். அவர் ஊர் திரும்பும் போது அவருக்கு சொந்தமான திருவிதாங்கோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் ரூ. 4,72,676 இருந்துள்ளது.
மார்ச் 10-ம் தேதி பணம் எடுக்க ஏடிஎம் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நைஜீரியாவில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்த மார்ச் 8ம் தேதி 97,407 ரூபாயும் மார்ச் 9-ம் தேதி 95,933 ரூபாயும் இணைய வழி வங்கி சேவை மூலம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து பிரபின் பெலிக்ஸ் ராஜன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து புகார் அளித்தார். மறுநாள் திருவிதாங்கோடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்று புகார் அளிக்க சென்று வங்கி கணக்கை பார்த்த போது 10-ம் தேதி இரவும் 85,273 ரூபாய் இணைய வழி பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிரபின் பெலிக்ஸ் ராஜன் வங்கி மேலாளரிடம் புகார் அளித்து இணைய வழி வங்கி சேவையை முடக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் வங்கி அலுவலர்கள் முறையாக பரிமாற்ற தகவல்களை கொடுக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் அவரை அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அவருக்கு ஒருமாத விடுப்பு முடிந்ததும் மீண்டும் நைஜீரியா சென்று விடவே வங்கி நிர்வாகம் இந்த மோசடி குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 11ம் தேதி மீண்டும் அந்த வங்கி கணக்கில் இருந்து 95,933 ரூபாயை மர்ம நபர் இணைய வழி சேவை மூலம் திருடியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பிரபின் பெலிக்ஸ் ராஜனின் மனைவி சந்தூரி ரெஜிலா லெட் மீண்டும் வங்கி கிளையில் புகார் அளித்ததாக தெரிகிறது. ஆனால் மீண்டும் வங்கி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் சந்தூரி ரெஜிலா லெட் 20-ம் தேதி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சைபர் கிரைம் போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சீனாவில் இருந்து மர்ம நபர் யாரோஇன்ஜினியர் வங்கி கணக்கை ஹேக் செய்து அந்த கணக்கில் இருந்த பணத்தை இந்தியாவில் உள்ள பல வங்கி கிளைகளில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றி கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source Puthiya thalaimurai