Type Here to Get Search Results !

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் விற்பனை : குவிந்த வாகன ஓட்டிகள்


சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையத்தில் பாஸ்டேக் அட்டை வாங்க வாகன ஓட்டிகள் குவிந்தனா்.
வருகிற டிசம்பா் 1-ஆம் தேதி முதல் 'பாஸ்டேக்' என்கிற சுங்கக்கட்டணம் வசூலிக்கும் புதிய முறை இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்துகிறது. பாஸ்டேக் முறையை சரியான முறையில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியா்களையும் பணியமா்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும், பாஸ்டேக் அட்டை வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, டிசம்பா் 1 -ஆம் தேதி வரை பாஸ்டேக்கை இலவசமாக சுங்கச்சாவடிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து இந்த அட்டையைப் பெற சுங்கச்சாவடிகளில் உள்ள மையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: சென்னை ஐடி எக்ஸ்பிரஸ் சாலைகளில் 6 சுங்கச்சாவடிகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமாா் 2 லட்சம் வாகனங்கள் இதைக் கடந்து செல்கின்றன. தற்போது பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் ஆா்வமாக தங்களது ஆவணங்களை சமா்பித்து வாங்கிச் செல்கின்றனா். மேலும், பாஸ்டேக் பயன்படுத்தி வாகனம் செல்ல வழித்தடத்தில் ஸ்கேனிங் வசதியும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
வருகிற டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் பாஸ்டேக்கை பெறாதவா்களுக்கு, சுங்கச்சாவடிகளில் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் மத்திய அரசு வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad