உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30 ஆகிய நாட்களில் 27 மாவட்டங்களில் நடக்கிறது, இதில் கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படை அல்லாத தேர்தல்களில் மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க உறுதி செய்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. மேலும் பதற்றம் நிறைந்த மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கவும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைளை வீடியோ ஒளிப்பதிவு மற்றும் இணையதளம் மூலம் மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணித்து பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க மத்திய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக இரண்டு அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு மூன்று பறக்கும் படை வீதம் முதன்ைம பொறுப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, பறக்கும் படை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.