Type Here to Get Search Results !

கரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு



கரோனா விழிப்புணர்வுக்காக இருமல் சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள காலர் ட்யூனை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எடுத்துக்கொண்டிருக்கின்றன.

கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை செல்லிடப்பேசிகள்வழி மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஆனால், இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. செல்லிடப்பேசியில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது.

தொடக்கத்தில் சில செல்லிடப்பேசி நிறுவனங்கள் இந்த இலவச விழிப்புணர்வு விளம்பரத்தை ஒலிபரப்பின. இப்போது மேலும் சில நிறுவனங்கள், தங்களது சேவையுடன் இந்த இருமல் ஒலிபரப்பையும் இணைத்துக் கொண்டுவிட்டன.

பெரும்பாலான செல்லிடப் பேசி எண்களைத் தொடர்புகொண்டால், எடுத்தவுடனே இருமல் சப்தம்தான் கேட்கிறது. சம்பந்தப்பட்டவர் அழைப்பை எடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தொடர்ந்து வேற்று மொழியில் பேசுவதால் தவறான எண்ணுக்குத்தான் தொடர்புகொண்டுவிட்டோமோ என்று அஞ்சித் துண்டிக்க நேரிடுகிறது என்று பயனீட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் மேற்கொள்ளும் அனைத்து அழைப்புகளின்போதும் இந்த இருமல் சப்தமும், அதைத் தொடர்ந்து எச்சரிக்கை வசனமும் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. தவிர, அவசரமாக எதையாவது தெரிவிக்க வேண்டும் என்றால்கூட முழு வசனத்தையும் கேட்டேதீர வேண்டிய நெருக்கடி நேரிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த விழிப்புணர்வுச் செய்தி, உள்ளபடியே அதன் நோக்கத்தை நிறைவேற்றக் கூடியதாக இல்லை, தேவைப்படுகிற பலரையும் சென்றடையும் வாய்ப்புமில்லை என்றே கூறலாம் - ஏனெனில் எல்லாமே ஆங்கிலத்தில்தான் ஒலிக்கிறது, தமிழில் எதுவுமில்லை.

இந்நிலையில் கரோனா விழிப்புணர்வுக்காக இருமல் சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள காலர் ட்யூனை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் , 'இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்படும் மனநிலைக்கு தள்ளப்படுவதாகவும் , குறிப்பிட்ட காலர் ட்யூன் எரிச்சல் ஊட்டும் வகையில் இருப்பதாகவும்' தெரிவித்துள்ளார்.


Top Post Ad

Below Post Ad