Type Here to Get Search Results !

கேரளாவை மிரட்டும் கொரோனா: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


கேரளாவில் கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்டத்தில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரானியை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்தாலியில் இருந்து திரும்பிய 3 பேர் மற்றும் உறவினர்கள் 2 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனி வார்ட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை அவர்களது உடல் நிலை திருப்திகரமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க மாநில சுகதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் நூஹூ வெளியிட்டுள்ளார். இருப்பினும் நாளை தொடங்க உள்ள 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ெகாரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பின்னர் தனியாக தேர்வு எழுதி அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை பத்தனம்திட்டா முழுவதும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். 
அண்டை மாவட்டமான கோட்டயத்துக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் வழியாக செல்லும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு முக கவசம், கையுறைகள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா கூறியது: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து திரும்பி வருபவர்கள், அதை மறைத்து வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும். நோய் அறிகுறி இருந்தும், அது தொடர்பான விபரங்களை தெரிவிக்காவிட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபரங்களை தெரிவிக்காமல் இருப்பவர்கள் குறித்து அருகில் வசிப்பவர்கள் போலீஸ் அல்லது சுகதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பத்தனம்திட்டாவில் நோய் பாதிக்கப்பட்ட 3 பேரும் கடந்த 29ம் தேதி வந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் உடன் பயணித்தவர்களும் தங்களது விபரங்களை சுகாதாரத்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். இதற்கிடையே நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் 182 பேர் விமானத்தில் வந்துள்ளனர். அவர்களது பெயர், விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நோய் அறிகுறி இல்லாவிட்டாலும் வீடுகளில் கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ெபண் குழந்தைக்கு கொரோனா?
எர்ணாகுளத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை தனது தாய், தந்தையுடன் இத்தாலியில் இருந்து துபாய் வழியாக நேற்று முன்தினம் கொச்சி வந்தனர். நேற்று அந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோருக்கும் காய்ச்சல் உள்ளதால் அவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுடன் விமானத்தில் வந்த பயணிகளின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர் என தெரிகிறது. இந்த நிலையில் கொச்சி விமான நிலையம் வழியாக வந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ேமலும் விமான நிலைய ஊழியர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

Top Post Ad

Below Post Ad