நம்பிக்கை என்னும் கண்ணாடி
வாழ்க்கை வெற்றியின் ரகசியம்.
எந்த காரியம் செய்தாலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை கொண்டு செய்யுங்கள்.
அந்த காரியம் இனிதே நடக்கும். உங்களிடமும் ஒரு 'நம்பிக்கை' கண்ணாடி இருக்கின்றது. அதை எப்போதும் அணிந்துகொண்டு செய்யுங்கள்.
நினைத்தது நடக்கும்
இரு இளைஞர்கள் ஆற்றின் மறுகரையில் இருக்கும் அவர்களின் வீட்டிற்க்குச் செல்ல நினைத்தார்கள்.
ஆனால் அன்று ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததை கவனித்தார்கள். அவர்களுக்கு நீச்சல் நன்றாக தெரிந்தாலும் அவர்களுக்குள் பயம் இருந்தது.
என்ன செய்வது அறியாமல் சுற்றும் முற்றும் பார்க்கும்பொழுது தூரத்தில் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவரிடம் சென்று, "ஐயா! நாங்கள் இருவரும் ஆற்றைக் கடக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும்" என்று வேண்டினார்கள்.
அதற்கு முனிவரும் செவி சாய்த்து தன்னிடம் இருந்த இரு பொட்டலங்களை கையில் எடுத்து எதோ சில மந்திரங்களை உச்சரித்து ஆளுக்கு ஒன்றை கையில் கொடுத்தார். அதோடு " இந்த பொட்டலத்தில் மிகப் பெரிய சக்தியை உள்ளடக்கி வைத்திருக்கிறேன். இவற்றை வைத்துக்கொண்டு நீந்துங்கள்.
இவைகள் உங்கள் கையில் இருக்கும் வரையில் உங்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் வராது. ஆனால் ஒரு நிபந்தனை. ஆற்றை கடந்து முடியும் வரையில் இந்த பொட்டலத்தை எக்காரணம் கொண்டும் திறந்து பார்க்கவே கூடாது" என்றார். இருவரும் அதை ஏற்றுக்கொண்டு ஆற்றை கடக்க புறப்பட்டார்கள்.
அவர்கள் அந்த பொட்டலத்தை கையில் வாங்கியவுடன் ஏதோ ஒரு சக்தி உடம்பினுள் புகுவதை உணர்ந்தார்கள். அவர்கள் நீந்த ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம் ! அவர்கள் பயமில்லாமல் நன்றாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.
பாதி வழியை மிக இலகுவாக கடந்தார்கள். இருவரில் ஒருவனுக்கு அந்த பொட்டலத்திற்குள் என்ன சக்தி இருக்கின்றது என்பதை அறிய ஆவலாக இருந்தான். முனிவரின் நிபந்தனையை மீறி அந்த பொட்டலத்தை திறந்து பார்த்தான்.
அதற்குள் ஒரு சிறிய 'கல்' இருந்தது. உடனே அவன் மனதில் 'இந்த சிறிய கல்லையா நம்பி ஆற்றில் இறங்கினேன்.ஐயையோ நான் என்ன செய்வேன்?' என்று நினைக்க நினைக்க நீந்துவதை விட்டான். சீக்கிரமே அவனை வெள்ளம் அடித்துக்கொண்டு போனது.
மற்றொருவனோ பிரித்து பார்க்காமல் முனிவரின் வார்த்தையை நம்பினான். எளிதாக கரை சேர்ந்தான். அன்று முதல் எந்த செயலை செய்ய நினைத்தாலும் அந்த பொட்டலம் அவனுக்கு எல்லா செயலிலும் வெற்றியைத் தர ஆரம்பித்தது.
இது தான் வாழ்க்கை வெற்றியின் ரகசியம்.
எந்த காரியம் செய்தாலும் உங்களுக்குள் இருக்கும் நம்பிக்கை கொண்டு செய்யுங்கள்.
அந்த காரியம் இனிதே நடக்கும். உங்களிடமும் ஒரு 'நம்பிக்கை' கண்ணாடி இருக்கின்றது. அதை எப்போதும் அணிந்துகொண்டு செய்யுங்கள்.
நினைத்தது நடக்கும். மற்றவர்கள் உங்களை திசை திருப்ப அவர்கள் அணிந்து கொண்டிருக்கும் கண்ணாடியின் நிறம் தான் காட்சியாக தெரிகிறது' என்று உங்களைக் குழப்புவார்கள்.
நீங்கள் குழம்பாதீர்கள். நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறம் காட்சியாகத் தெரிந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். இந்த நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதித்துக்கொண்டால் உலகை வெல்லலாம்.