Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டிச.7ம்தேதி முதல் மருத்துவ கல்லூரிகள் செயல்படலாம். மற்ற கல்லூரிகள் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் செயல்படலாம்.

டிச.14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.


தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதால் கொரோனா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,600 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000ல் இருந்து தற்போது 11,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது. தமிழ்நாட்டில் இன்று வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், கடந்த 28ம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், தற்போதுள்ள நோய் பரவல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் உள்ள தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் வரும் 7ம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் 7ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், 2020-21 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வரும் 14ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நாளை முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும்.
வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும். தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
பல்வேறு தளவுர்களுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை தர கேட்டுக் கொள்கிறேன்.


Top Post Ad

Below Post Ad