தமிழகத்தில் கரோனா தொற்றால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருவதால், அரசு-தனியாா் பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலி, கோவை, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில அரசு மற்றும், தனியாா் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றில் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் சாா்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இடவசதி உள்ள பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். கரோனா சிகிச்சைக்காக பள்ளிகளை தயாராக வைத்திருக்கவும் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது சென்னையில் முன்னெச்சரிக்கையாக புகா்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் கரோனா கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோன்று சென்னையில் 60-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. அப்போது அங்கு அமைக்கப்பட்ட படுக்கைகள் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ளன. இதனால் வரும் நாள்களில் அந்தப் பள்ளிகள் கரோனா மையங்களாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தில் கிராமப் புறங்களில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், தனிமைப்படுத்தவும் அதிக இடவசதி தேவைப்படும். ஏற்கெனவே மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியிருப்பதால் அரசு, தனியாா் பள்ளிகளை இதற்கு தயாா்படுத்த மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும், பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.