தண்ணீரில் விழுகின்ற மழைத்துளி அழகு
தண்ணீராய் அது பாய்ந்து செல்வதும் அழகு
வெள்ளமாய் விரைந்தோடும் வேளையில் அழகு
நீர் நிலையில் சென்றது சேர்வதும் அழகு.
அமைதியாய் உறங்குகின்ற நாய்க்குட்டிகள் அழகு
ஆவலோடு பால் குடிக்க முந்துவது அழகு
தாய் மேலே ஏறி அவை விளையாடுவது அழகு
மனிதரோடு அன்பு காட்டிக் குழைவதும் அழகு.
கூட்டமாய் அமர்கின்ற வெண் கொக்கு அழகு
காத்திருந்து இரைகளைப் பிடிப்பது அழகு
பட்டென்று சிறகடித்துப் பறக்கையில் அழகு
வரிசையாய் கூட்டுக்குத் திரும்புவதும் அழகு.
அனைத்தையும் தோற்கடித்து நிற்கிறதோர் அழகு
சீருடையில் வருகின்ற குழந்தைகளின் அழகு
சீண்டலோடும் சிணுங்கலோடும் பழகுகின்ற அழகு
பார்க்கவில்லை இன்றுவரை அது போல் ஓர் அழகு.
*கிராத்தூரான்