தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. குளிர்காலத்தில் பொதுவாக கார்கள் பாதிக்கப்படும். ஏனெனில் இத்தகைய காலகட்டத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் எண்ணற்ற வழிகளில் உங்கள் வாகனங்களை பாதிக்கலாம்.
எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் கார்களை முறையாக பராமரிப்பது அவசியம். எனவே உங்கள் கார்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.,
1. பேட்டரி :
பொதுவாக குளிர்காலத்தில் கார் பேட்டரிகள் மிகவும் சிக்கலை எதிர்கொள்ளும். எனவே, உங்கள் காரின் பேட்டரி 4 முதல் 5 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால், அதை மாற்றுவது நல்லது. இல்லையென்றால், காரை ஸ்டார்ட் செய்யும் போது பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க பேட்டரியின் திறனை சரி பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
2. டயர்கள் :
வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் டயர் அழுத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக டயர்கள் சேதமடைந்து, எரிபொருள் திறன் குறைகிறது. எனவே உங்கள் டயர்களுக்கு போதுமான அழுத்தம் உள்ளதா என்பதை அடிக்கடி சரிபார்க்கவும். மேலும் மழைக்காலங்களில் காரின் டயர்கள் அதிகம் அழுக்காகும் என்பதால் அதனை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
3. கார் உட்பகுதி :
கார் உட்பகுதியில் விரிக்கும் விரிப்புகள் சிறந்ததாக இருந்தால் நல்லது. குளிர்காலத்தில் சேறு, மண் போன்றவையும், தண்ணீர் உள்ளே போகாமலும் பாதுகாக்க ரப்பர் வைப்பர் ஸ்டைல் மேட்கள் பயன்படுத்தலாம். இதனை எளிதாக எடுத்து கழுவி மீண்டும் பயன்படுத்தலாம்.
4. தரைவிரிப்புகள் மீது மேற்பூச்சு :
தரைவிரிப்புகள் மற்றும் ரப்பர் மேட்கள் நன்றாக சுத்தம் செய்த பிறகு அதன் மீது ஒரு வித பூச்சு அதாவது ஈரப்பதம் இல்லாமல் இருக்க சொலுயூஷன் தடவி பின் அதனை கார் உட்புறம் போடவேண்டும்.
5. கதவு மற்றும் ஜன்னல்கள் :
கதவு மற்றும் ஜன்னல்கள் மூடும் பகுதியில் உள்ள ரப்பர் பகுதிகளை சிலிக்கான் கொண்டு பூசி விட்டால் குளிர்காலத்தில் கதவு மூடி திறப்பதில் ஏற்படும் பிரச்னை இருக்காது. கதவு ஜன்னல் மூடும் ரப்பர் முத்திரை மீது ஆயில் சார்ந்த பொருளை தடவினால் சீக்கிரம் உடைந்து விடும்.
6. வாகன திரவங்கள் :
உங்கள் கார்களுக்கு எஞ்சின் ஆயில், கூலன்ட், டிரான்ஸ்மிஷன் திரவம் மற்றும் விண்ட்ஷீல்டுக்கான தண்ணீர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அதாவது குளிர்காலத்தில் இந்த திரவங்களின் அடர்த்தி பாதிக்கப்படும் என்பதால் இவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக மழைக்காலத்தில் உங்கள் காரை ஸ்டார்ட் செய்யும் போது எஞ்சின் சிறிது நேரம் சூடாகுமாறு இயக்குங்கள்.
7. ஸ்பார்க் பிளக்குகள் :
குளிர்காலத்தில் ஸ்பார்க் பிளக்குகள் சேதமடைய வாய்ப்புள்ளது. தேய்ந்து போன பிளக்குகள் இருந்தால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எனவே, குளிர்காலத்தில் உங்கள் காரின் செயல்திறனில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தால் தவறாமல் சரிபார்க்கவும்.