Type Here to Get Search Results !

வாட்ஸ்அப்பில் WhatsApp Pay மூலம் பணத்தையும் பரிமாற்றிக்கொள்ளும் புதிய சேவை


பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI) அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்கவுள்ளது. இதனை வியாழக்கிழமையன்று, உலகளாவிய தலைவர் வில் காட்கார்ட் (Will Cathcart) அறிவித்தார்.


வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் பயனர்களுக்கு இந்த பரிவர்த்தனை சேவையின் சோதனை ஓட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்த ​​சேவை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது


"இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்க, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் இந்த சேவையைத் (பணப் பரிவர்த்தனை) தொடங்கலாம்" என்று ஒரு நிகழ்வில் கேத்கார்ட் கூறினார்.


இந்திய நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2023-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


ஓமிடியார் நெட்வொர்க் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) ஆகியவற்றின் அறிக்கையின்படி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.75 கோடி வரை ஆண்டு வணிக வருவாய் வைத்திருக்கும் எம்.எஸ்.எம்.இ உரிமையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இந்த திட்டம் முழுமையாக அறிமுகமான பின், வாட்ஸ்அப் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்துவார்கள் என கூறியுள்ளது.


இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது டிஜிட்டல் கட்டண சேவையை தொடங்க இந்தியாவின் ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.


காந்த் மேலும் பேசுகையில் "அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளையும் பூர்த்தி செய்தவுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பே-யை (WhatsApp Pay) எதிர்பார்க்கலாம்" எனக் கூறினார்.


பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், கடந்த ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் பே-யை இந்தியாவில் தொடங்க இந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அறிவித்திருந்தார்.


இந்தியாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது (பேஸ்புக் நாட்டில் மேலும் 300 மில்லியனைக் கொண்டுள்ளது). வாட்ஸ்அப் யுபிஐ அடிப்படையிலான வாட்ஸ்அப் பே-யைத் தொடங்கினால், பேடிஎமின் 230 மில்லியன் பயனர்கள் என்ற எண்ணிக்கையை எளிதில் கடந்துவிடும்.


நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனை சேவையைத் தொடங்குவதற்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு பூர்த்தி செய்துவிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


ஆக, விரைவில் வாட்ஸ்அப் பே சேவையை ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கலாம்.

Top Post Ad

Below Post Ad