வடகிழக்கு பருவ மழை துவங்கியிருப்பதாலும், வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சியினாலும் தமிழகத்தின் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் திடீரென்று பெய்த கனமழையினால், வெப்பம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர். இந்நிலையில், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற நாளையும், நாளை மறுதினமும் செப்22, 23 ஆகிய தேதிகளில் மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களிலும் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 12 மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், நவராத்திரி விடுமுறையை மனதில் வைத்து வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள், திங்களன்று இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் திங்களன்று விடுமுறை விடப்படுமா என்கிற எதிர்பார்ப்புகளுடன் பள்ளிகளில் ஆர்வமாக விசாரித்து வருகிறார்கள். எனினும், இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை