பொதுத்துறையின் 10 வங்கிகள் இணைக்கப்பட்டு ஏப். 1 முதல் நான்கு வங்கிகளாக மாற்றப்பட உள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர்களை பயமுறுத்தும் வகையில் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.ஏப்ரல் 1 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் வங்கியும் யுனைடெட் இந்தியா வங்கியும் இணைய உள்ளன. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும்; யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் ஆந்திரா மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளும் இணைகின்றன.nsmimg759527nsmimgஇந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைந்து செயல்பட உள்ளது. 10 பொதுத்துறை வங்கிகள் இணைந்து நான்கு வங்கிகளாக மாறுகின்றன.இந்நிலையில் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் மார்ச் 24ம் தேதிக்குள் சில அடிப்படை விஷயங்களை மேற்கொள்ளுமாறு சமூக வலைதளங்களில் தகவல் உலா வருகிறது.அதன் விபரம்:பத்து வங்கிகள் நான்கு வங்கிகளாக மாறுகின்றன. அதனால் மார்ச் 24க்குள் வருமான வரி பிடித்தம் தொடர்பான 16ஏ படிவத்தை உடனடியாக வழங்குங்கள்; வங்கி கணக்கில் இருந்து மின்னணு வழியில் பணம் செலுத்தும் இ.சி.எஸ். முறையை மாற்றுங்கள்; ஏற்கனவே வைத்துள்ள ஏ.டி.எம். கார்டை ஏப்ரல் 1க்கு பின் பயன்படுத்த முடியுமா என தெரிந்து கொள்ளுங்கள். இணைக்கப்படும் வங்கிகளில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கணக்கு வைத்திருந்தால் அதற்கு வேறு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்; மேலும்லாக்கர் வைத்திருந்தால் புதிய லாக்கர் வழங்க விண்ணப்பியுங்கள்;வைப்புத் தொகை மற்றும் கடன்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வட்டி விகிதம் வழங்கப்படுமா அல்லது மாறுபடுமா என தெரிந்து கொள்ளுங் கள். இதுபோன்ற விஷயங்களை தெரிந்து அதற்கான ஆவணங்களை உடனடியாக வங்கிகளில் கொடுத்து சரிசெய்து கொள்ளுங்கள். மார்ச் 27ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறை. அதன் பின் ஆண்டு இறுதி கணக்கு வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பர் என்பதால் மாற்ற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: மக்களை பயமுறுத்தும் நோக்கில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. வங்கிகள் இணைப்புக்கு பின் ஒருங்கிணைந்து செயல்பட ஆறு முதல் ஓராண்டு காலம் பிடிக்கும். மேலும் இணைப்புக்கு முன் அல்லது இணைப்புக்கு பின் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை குறித்து வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படும்; அப்போது வாடிக்கையாளர்கள் அவற்றை செய்தால் போதும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.