சபரிமலையில் இம்மாதம் 14 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்தது.
திங்கள்கிழமை மட்டும் 3 வயதுக் குழந்தை உள்பட 8 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கேரளாவில் மட்டும் தற்போது 12 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் இம்மாதம் 14 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவசம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். சபரிமலையில் மாத பூஜை எப்போதும் போல் நடைபெறும் என்றும் தேவசம் போர்டு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக திங்களன்று திருப்பதி தேவஸ்தானமும் செயல் அலுவலர் தர்மா ரெட்டி வாயிலாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.