நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் தொடர்பான தனது கருத்தை, வீடியோ மூலமாக வெளியிட்டார். அதில், மார்ச் 22ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த ‘ஜனதா ஊரடங்கு’ திட்டத்தை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
இத்தாலி நாட்டில், அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவை அந்த மக்கள் சரிவர பின்தொடராத காரணத்தால் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் நிலை பரவலுக்கு சென்றதாகவும் (அதாவது, சமூக அளவிலான பரவல் – community Transmission) தெரிவித்தார்.
எனவே,14 மணி நேரம் ‘ஜனதா ஊரடங்கு’ கடைபிடிப்பதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுத்து நிறுத்தலாம், அதன் மூலம் இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அந்த வீடியோ, அவரது ட்விட்டர் மற்றும் யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. எண்ணற்ற ரசிகர்களால் அந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது.
எவ்வாறாயினும், ரஜினியின் இந்த கருத்துக்கு பலதரப்பில் இருந்து எதிர் கருத்துக்கள் கிளம்பின.
அதன் தொடர்ச்சியாக, இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ட்விட்டர் நிருவனம் தங்கள் தளத்தில் இருந்து நீக்கியது.
தமிழ்நாடு வெதர்மேன், தனது ட்விட்டர் பதிவில்” ரஜினியின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அந்த தகவல் பொய்யான தகவல் என்று எடுத்துக் கொள்ளலாம். 12 மணி நேரம் பரவுதை தடுத்தால் கொரோனா வைரஸ் மறைந்து விடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்தை 57 லட்சம் மக்கள் ட்விட்டரில் பின்தொடர்ந்தாலும், ஒரு அவரச காலத்தில் அரைகுறையான தகவல் மக்கள் மத்தியில் சென்றடையாமல், வேகமாக முடிவெடுத்த ட்விட்டர் நிறுவனத்துக்கு பலதரப்பட்ட மக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.