தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை இருந்து வந்தது. கடந்த 25ம் தேதி ஒரு பவுன் ரூ.38,312க்கும், 26ம் தேதி ரூ.38,240க்கும் விற்கப்பட்டது. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.4,740க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தி வந்தது. இந்த சந்தோஷம் ஓரிரு நாள் கூட நீடிக்கவில்லை.
அதாவது இன்று காலை தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிடு,கிடு உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.76 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,816க்கும், பவுனுக்கு ரூ.608 அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,528க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை வரும் நாட்களில் ஏறுவதும், இறங்குவதுமான போக்கு தான் காணப்படும் என்று தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: உலகம் முழுவதும் மக்களிடையே கொரோனா வைரஸ் போய் விட்டதா, இருக்கிறதா? என்ற ஒரு குழப்பமான நிலை நீடித்து வருகிறது.
இதனால் யாரும் எந்த விஷயத்திலும் முழு ஈடுபாட்டோடு இன்னும் ஈடுபடவில்லை. இதனால், பொருளாதாரம் மேலும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் முதலீட்டாளர்களும் எதில் முதலீடு செய்வது என்று ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்னும் 15, 20 நாட்களுக்கு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக நிலை தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Source Tamil Murasu