காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதால் திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து உத்தரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர் சுபாஷ்(43) அக்கிராம மக்களுடன் சென்று சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியதையடுத்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கி.முத்துக்குமார் சுபாஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
திங்கள்கிழமை இதே திமுக வேட்பாளர் க.சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக உத்தரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் வெ.சதீஷை பணியிடை நீக்கம் செய்திருந்த நிலையில் இரண்டாவதாக சுபாஷ் பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.