Type Here to Get Search Results !

இறக்குமதி செல்போன், ஏசி விலை இன்று முதல் உயருகிறது

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘செல்போன், ஏசி’ உள்ளிட்டவற்றின் விலை, இன்று(ஏப்ரல் 1) முதல் உயருகிறது.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், 2021 -2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பிப்.,1ல் தாக்கல் செய்தார். அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ‘செல்போன்’ பாகங்களுக்கான சுங்க வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், இறக்குமதி செல்போன்கள் விலை உயரும். அதேபோல், ‘செல்போன் சார்ஜர்’ விலையும் உயருகிறது.

சில உதிரிபாகங்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், ‘கார், பைக்’ விலை உயரும்.’கம்ப்ரசர்’களுக்கான சுங்க வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், ‘பிரிட்ஜ், ஏசி’ விலை உயரும். காலணி, தோல்பை உள்ளிட்ட இறக்குமதி தோல் பொருட்களின் விலையும் உயருகிறது.

‘எல்.இ.டி.,’ விளக்குகள் மற்றும் ‘சோலார்’ பொருட்களுக்கான வரி, 5ல் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும். இதைத் தவிர, விமான பாதுகாப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், விமானக் கட்டணமும் உயரும்.

அதே நேரத்தில், இறக்குமதி செய்யப்படும் தங்கம் வெள்ளிக்கான சுங்க வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இவற்றின் விலை குறையும். அதேபோல் பிளாட்டினம் மற்றும் பொலாடியம் பொருட்களின் விலையும் குறையும். சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் விலையும் குறைகிறது.

Top Post Ad

Below Post Ad