Type Here to Get Search Results !

டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு.. தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!


கிரிக்கெட் உலகின் பிரம்மாண்டமான டி20 லீக் தொடர்களில் ஒன்று இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல். ஆண்டுதோறும் ஒரு திருவிழாவை போலவே ஐபிஎல் தொடரை இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அந்த வகையில் நடப்பு சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி அன்று ஆரம்பமானது. இதுவரை ஆறு லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு செய்யும் கேப்டன்கள்:

இதுவரை நடைபெற்ற 6 லீக் போட்டிகளில் டாஸ் வென்ற அணிகள் அனைத்தும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளன என்பதை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.முதலில் பந்து வீசுவதை இதுவரை ஒரு ராஜ தந்திரத்தை போலவே ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் இந்த சீசனில் தேர்ந்தெடுத்து வருகின்றன.பெங்களூர், டெல்லி, ஐதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா என ஆறு போட்டிகளில் டாஸ் வென்ற அணிகளின் கேப்டன்கள் முதலில் பந்து வீச்சைதான் தேர்வு செய்துள்ளனர். இதில் ஐதராபாத் அணி இரண்டு முறை டாஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.நடந்து முடிந்த ஆறு போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் டாஸ் வென்ற பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மட்டும்தான் இரண்டாவதாக பேட் செய்து வெற்றி பெற்றுள்ளன. மற்றபடி டாஸ் வென்று முதல் பந்து வீசி, பிறகு பேட் செய்த அணிகள் தோல்வியை தழுவி வருகின்றன.

அதுவும் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா 10 ரன்கள் வித்தியசாத்திலும், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை 10 ரன்கள் வித்தியசாத்திலும், ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூர் 6 ரன்கள் வித்தியசாத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நான்கு போட்டிகளும் முழுவதுமாக 40 ஓவர்கள் வரை இரு அணிகளும் விளையாடி உள்ளன. அதுவும் வெறும் பத்து ரன்களுக்கு கீழ்தான் அணிகள் தோல்வியை தழுவி உள்ளன.

டாஸ் விவகாரத்தில் அணிகள் தப்பு கணக்கு போடுகிறதா?

நடந்து முடிந்த போட்டிகளின் முடிவை வைத்து பார்த்தால் டாஸ் விஷயத்தில் அணிகள் தப்பு கணக்கு போட்டதாகவே மேலோட்டமாக பார்க்கும்போது தெரிகிறது. அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் முதல் போட்டி விளையாடி முடித்த கையோடு ஒன்று சொல்லியிருந்தார். அது போட்டிகள் 7.30 மணிக்கெல்லாம் ஆரம்பமாவது குறித்தும், DEW குறித்தும் தோனி குறிப்பிட்டு சொல்லி இருந்தார். அதே நேரத்தில் தங்கள் அணியின் பவுலர்கள் நல்ல லைனில் பந்து வீசவில்லை என குறிப்பிட்டு சொல்லி இருந்தார். அதே போல கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் சொல்லியிருந்தார். அவர் சொன்னது தான் அதற்கடுத்த போட்டிகளில் நடந்து கொண்டிருக்கின்றது. இதில் முதலில் விளையாடிய அணிகள் கொஞ்சம் சிரமப்பட்டு கூடுதலாக தோனி சொன்ன அந்த ரன்களை எடுத்ததுதான் பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது.

கடைசி 5 ஓவர்கள் ரன் எடுப்பதில் சிரமம்:

மும்பை மைதானம் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க உதவும் ஆடுகளம். அதனால் டாஸ் கணக்கு இங்கு எடுபடாது.

ஆனால் சென்னை மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக இரண்டாவதாக பேட் செய்யும் அணிகள் கடைசி 5 ஓவர்களில் ரன் குவிக்கவே தடுமாறுகின்றன. அது கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் இரண்டாவதாக பேட் செய்து வெற்றிக் கோட்டுக்கு அருகே சென்று தோல்வியை தழுவியதும், மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா இரண்டாவதாக பேட் செய்து தடுமாறியதையும் மேற்கோள் காட்டி சொல்லலாம்.

சென்னை ஆடுகளம் முதல் 30 முதல் 32 ஓவர்கள் வரை பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஓரளவுக்கு உதவினாலும் அதற்கடுத்த இறுதி ஓவர்களில் ரன் குவிப்பு என்பது சுத்தமாக இல்லை. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக களம் மாறி விடுகிறது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் சென்னை மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியில் கூட கடைசி பந்தில் தான் வெற்றிக்கான ரன்களை எடுத்திருந்தது பெங்களூர். அந்த ஆட்டத்தில் மும்பை கொஞ்சம் டைட்டாக வீசி இருந்தால் வென்றிருக்கும்.

அதனால் சென்னையில் அடுத்ததாக நடைபெற உள்ள ஆறு போட்டிகளில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட் செய்யவே விரும்பும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

டாஸ் வென்றால் இனி எதை தேர்வு செய்வார்கள்?

இதற்கு இரண்டாவதாக பேட் செய்து தோல்வியை தழுவிய அணிகளின் கேப்டன்கள் “பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததுதான் காரணம்” என முட்டுக் கொடுத்தாலும் ஆடுகளம் இரண்டாவதாக பேட் செய்பவர்களுக்கு ரன் குவிக்க உதவவில்லை என்பதுதான் எதார்த்தம். அதனால் சென்னை மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் இனி பேட் செய்யவே கணக்கு போடும். அது அந்த அணிக்கு சரியானதாக அமையும் என நம்புவோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் சீசனிலும் டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்து வீசவே பெரும்பாலான ஆட்டங்களில் முடிவு செய்தன. பின்னர் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து டாஸ் வெல்லும் அணிகள் பேட்டிங் செய்ய முடிவு செய்தன. அது போல இந்த முறையும் டாஸ் விஷயத்தில் அணிகள் தங்களது கண்ணோட்டத்தை மாற்ற வேண்டியுள்ளது.

Source Puthiya Thalaimurai

Top Post Ad

Below Post Ad