கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து பொது முடக்கம் இருக்கிறது.
தளர்வுகள் அளிக்கப்பட்டு பின்னர் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்து ஊரடங்கு இருந்து வருகிறது.
ஊரடங்கால் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்து வருகிறார்கள். அவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலம் தங்களது வேலைகளை கவனிக்கிறார்கள்.
இதேபோல மாணவ- மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வியை கற்கிறார்கள். இதற்காக அவர்களும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்துகிறர்கள்.
மேலும் பொழுது போக்குக்காக செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
வேலை, கல்வி மற்றும் பொழுதுபோக்குக்காக நீண்ட நேரம் செல்போனை பார்ப்பதால் இந்தியர்களுக்கு கண் பார்வையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
கடந்த ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 27.5 கோடி பேருக்கு, அதாவது கிட்டத்தட்ட 23 சதவீதம் பேருக்கு கண் பார்வையில் அதிக சேதம் இருந்ததாக அந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.
செல்போன்களை அதிக அளவில் பார்ப்பதால்தான் கண் பார்வையில் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.